ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவைத் தளமாகக் கொண்ட ஏர் அரேபியா (Air Arabia) விமான நிறுவனம், இலங்கை விமானப் பராமரிப்பு துறையில் தகுதியுடைய நிபுணர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அழைப்பிதழ் அடிப்படையிலான நிகழ்வொன்றை எதிர்வரும் நவம்பர் 17 முதல் 19 வரை கொழும்பில் நடத்தத் தயாராகி வருகிறது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்ற விரும்பும் தகுதிவாய்ந்த இலங்கை விமானத் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு இந்த ஆட்சேர்ப்பு நிகழ்வு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை விமானப் பராமரிப்பின் பல்வேறு தொழில்நுட்பப் பிரிவுகளில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக முன்னெடுக்கப்படுகிறது.
இதன்படி, விமானப் பராமரிப்பு பொறியியலாளர்கள் (B1 மற்றும் B2), விமானத் தொழில்நுட்பவியலாளர்கள், விமான அறை பராமரிப்பு நிபுணர்கள் மற்றும் விமான உலோகத் தகடு வேலை நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தொழில் வாய்ப்பு இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தங்களுக்குப் பொருத்தமான பதவிகளுக்கு ஏர் அரேபியாவின் உத்தியோகபூர்வ ஆட்சேர்ப்பு இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும்.
கொழும்பில் நடைபெறும் இந்த ஆட்சேர்ப்பு நிகழ்வில் நேரடியாகப் பங்கேற்கக்கூடிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுவார்கள். விண்ணப்பங்களில் தகுதியுடையவர்களாகத் தெரிவுசெய்யப்பட்டு உத்தியோகபூர்வ அழைப்பைப் பெறுபவர்கள் மாத்திரமே நிகழ்வில் பங்கேற்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் விமானப் பராமரிப்புத் துறையில் அனுபவமுள்ள தொழில்நுட்ப நிபுணர்களுக்கு இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரர்கள், நிறுவனத்தின் தேர்வு நடைமுறைகள் மற்றும் தொழில்சார் தகுதிகளுக்கு அமைவாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் விமானத் துறையில் பணியாற்றும் வாய்ப்பைப் பெறலாம்.
எனினும், இது அனைவரும் நேரடியாகச் சென்று பங்கேற்கக்கூடிய திறந்த ஆட்சேர்ப்பு நிகழ்வு அல்ல என்பதை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உத்தியோகபூர்வ அழைப்பைப் பெறாமல் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், வேலைவாய்ப்புத் தேவைகள், விண்ணப்ப நிலை மற்றும் நிகழ்வு தொடர்பான தகவல்களை ஏர் அரேபியாவின் உத்தியோகபூர்வ தொழில் வாய்ப்பு இணையத்தளத்தின் ஊடாக உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.










