வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றப்படும் இலங்கையர்கள் அதிகரித்து வருவதையடுத்து, வேலைவாய்ப்புக்காக விசிட் விசாவில் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மலேசியா, டுபாய் மற்றும் ஓமான் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறப்பட்ட வாக்குறுதிகளை நம்பி விசிட் விசாவில் பயணித்த பெருமளவிலான இலங்கையர்கள் தற்போது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
விசிட் விசா என்பது வேலைவாய்ப்புக்கான விசா அல்ல என வலியுறுத்தியுள்ள அமைச்சு, அவ்வாறான விசாவில் வேலை செய்வது சம்பந்தப்பட்ட நாட்டின் சட்டங்களை மீறுவதாக அமையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
இவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் கைது, தடுப்புக்காவல், நாடுகடத்தல் மற்றும் மோசடி அல்லது மனிதக் கடத்தலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், சிலருக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட வேலை கிடைக்காமல் போவதுடன், வேறு சிலர் சம்பளம் வழங்கப்படாமை, குறைந்த சம்பளம் வழங்கப்படுதல், கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்படுதல் மற்றும் நிதி நெருக்கடிகள் போன்ற பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க நேரிடுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
விசிட் விசாவில் வெளிநாடு சென்ற பின்னர் அதனை வேலை விசாவாக மாற்றிக்கொள்ள முடியும் அல்லது நாட்டைச் சென்றடைந்ததும் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறப்படும் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என இலங்கையர்களுக்கு விசேடமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கும் அனைத்து இலங்கையர்களும் சட்டபூர்வமான ஆட்சேர்ப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதுடன், வெளிநாடு செல்வதற்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவு செய்துகொள்ள வேண்டும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
சட்டபூர்வமான நடைமுறைகளைப் பின்பற்றுவது வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, நிதி மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு மிகவும் அவசியமானது எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.










