சுவிட்சர்லாந்து லூசெர்ன் மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் இச்சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் மேலும் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த சிறுவர்கள் 6, 7 மற்றும் 9 வயதுடையவர்கள் எனத் தெரியவருகின்றது.
Escholzmatt-Marbach கிராமத்தில் திங்கள் அதிகாலை 1.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது என தெரியவருகின்றது இந்த தீவிபத்தை 14 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பார்க்கக்கூடியதாக இருந்தது என பலரும் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் உயிரிழந்த குழந்தைகளின் தாய் (வயது 36) அவரது கணவர் (வயது-43) மற்றும் அவரது முன்னாள் கணவரான குழந்தைகளின் தந்தை (வயது -38) ஆகியோர் வசித்து வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஒரு உள்ளூர் விவசாயி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், நல்ல நிலையில் இருந்த வீடு எப்படி தீப்பிடித்தது என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் ஆனால் இதுவரை இச்சம்பவத்தை சந்தேகத்திற்குரியதாக கருதவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. லூசர்னில் ஏற்பட்ட இந்த தீ விபத்து உள்ளூர் சமூகத்தை ஆழமாக பாதித்துள்ளது.