சுவிட்சர்லாந்தில் சூரிச் நகரின், மிக முக்கியமான கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது, “பனி மனிதனை” (Böögg) – பாக்) எரித்து கோடை காலத்தை வரவேற்கும் பாரம்பரிய விழா
இந்த விழா “செக்செலாட்டன்” (Sechseläuten) என்று அழைக்கப்படுகிறது. “செக்செலாட்டன்” என்றால் “ஆறு மணிக்கு மணி ஒலித்தல்” என்று அர்த்தம்
“செக்செலாட்டன்” என்ற இந்த பனி மனிதனை எரிக்கும் பாரம்பரிய விழா, 1902 முதல் சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த சிறப்பான பாரம்பரிய விழா, ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை சரியாக மாலை 6 மணிக்கு கொண்டாடப்படும்.
இந்த நகரில் உள்ள மக்கள், பஞ்சு மற்றும் வெடிமருந்துகளால் பனிமனிதன் பாக் (Böögg) பொம்மையை செய்வார்கள். இந்த பொம்மை குளிர்காலத்தைக் குறிக்கிறது.
நகரின் பல்வேறு அமைப்புகள் பங்கேற்றும் ஊர்வலம், பிற்பகல் 3 மணிக்குத் ஆரம்பமாகும். பல விதமான வேடங்களை அணிந்த சுமார் 3,500 நகரவாசிகள், 50 குதிரை வண்டிகள் மற்றும் 30 இசைக்குழுக்கள் நகரத்தின் வழியாக ஊர்வலமாக, செக்செலாட்டன் நிகழ்வு நடைபெறும் இடத்தை வந்தடையும்.

அரசியல், வர்த்தகம், விளையாட்டு, கலை கலாச்சாரம் என அனைத்து துறைகளிலும் இருக்கும் முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தருவார்கள்.
மாலை 6 மணிக்கு, கிராஸ்முன்ஸ்டர் (Grossmünster) தேவாலயத்தின் மணிகள் ஒலிக்கும். அந்த மணிகள் ஆறாவது முறையாக ஒலிக்கும்போது, பத்து மீற்றர் உயரமான மிகப்பெரிய சிம்மாசனத்தின் மீது அமர்ந்திருக்கும் பனிமனிதனின் கீழ் உள்ள விறகுகளில் தீ வைக்கப்படும்
நெருப்பு மேலெந்து எரிந்து, பனிமனிதன் வெடித்து சிதறும் வரை குதிரை வீரர்கள் எரியும் பனிமனிதனை சுற்றி வலம் வந்தபடி இருப்பார்கள்.

பனி மனிதன் பொம்மையின் தலையில் வைக்கப்பட்டுள்ள வெடிமருந்து, எவ்வளவு விரைவாக வெடிக்கிறதோ அவ்வளவு விரைவாக கோடை காலம் வரும் என்று, சூரிச் நகர மக்களால் காலந்தொட்டு நம்பப்படுகிறது.
பனி மனிதன் பொம்மை விரைவாக வெடித்தால், அது சுப அறிகுறியாகவும், கோடை காலம் வெயிலுடனும், சிறப்பாகவும் அமையும் என மக்கள் நம்புகின்றனர்.
“பாக்” எனப்படும் இந்த பனி மனிதன் ஒரு சிறந்த வானிலை முன்னறிவிப்பாளராக இருக்க முடியாது என்ற அறிவியல் கருத்தை தாண்டி, சூரிச் நகர மக்களின் பராம்பரியமான நம்பிக்கை ஆண்டு தோறும் இந்த விழாவை சிறப்பாக கொண்டாட காரணமாக இருக்கிறது.

அதன்படி, இந்த வருடமும் சூரிச் நகரில் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையான 20 ஆம் திகதி இந்த விழா நடைபெற்றது.
சரியாக மாலை 6 மணிக்கு தேவாலய மணிகளின் ஆறாவது ஓசை கேட்டவுடன், கிராபுன்டேன் (Graubünden) மாகாணத்தின் தலைவர் மார்ட்டின் பூலர் (Martin Bühler), தயாராக இருந்த பனி மனிதனின் கீழ் இருந்த மரக்கட்டைக்குத் தீ மூட்டினார்.
சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. காற்று மென்மையாக வீசி கொண்டிருந்தது. மாகாணத்தின் தலைவர் மரக்கட்டைகளுக்கு தீமூட்டிய 10 நிமிடங்களுக்குப் பிறகு, பட்டாசுகள் வெடித்தன. தீப்பிழம்புகள் மேலே எழுந்து, பனி மனிதன் மீது படர்ந்து நெருப்பு வேகமாக வானுயர எழுந்து எரிந்தது.

இந்த விழாவில், இசை மற்றும் விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். மக்கள் பெரும் ஆரவாரத்துடன் காணப்பட்டனர். குறிப்பாக நிகழ்வில் பாடகி பீட்ரைஸ் எக்லி (Beatrice Egli) அனைவரதும் கவனத்தை ஈர்த்தார். (swissinfo.ch)