மூதூரில் மதுபானசாலையை மூடுமாறு வலியுறுத்தி 2வது நாளாக போராட்டம்

-மூதூர் நிருபர்-

மூதூர் இருதயபுரத்தில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை மூடுமாறு வலியுறுத்தி குறித்த மதுபான சாலையை முற்றுகையிட்டு இன்று செவ்வாய்கிழமை 2வது நாளாக சுழற்சிமுறை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களே அதிகளவில் பங்கு பெற்றிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மதுபான சாலைக்கு முன்னாள் நின்று சுலோகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.எனினும் மதுபானசாலை தொடர்ந்தும் திறந்தே காணப்படுகின்றது.அத்தோடு மதுபான சாலைக்கு மதுபானம் வாங்க வருபோரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

இதன்போது குறித்த மதுபான சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.தேர்தல் காலங்களில் தம்மை தேடிவரும் அரசியல்வாதிகள் தமது போராட்ட களத்திற்கு வருகை தந்து பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறியவில்லையெனவும் குற்றம் சாட்டினர்.

அத்தோடு குறித்த இடத்தில் சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முனைந்த போதும் அவ்விடம் வந்த பொலிஸார் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் பொதுமக்களை தடுத்து நிறுத்தினர்.

எனினும் குறித்த மதுபான சாலைக்கு முன்னாள் அமர்ந்து மக்கள் தமது எதிர்ப்பை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

நேற்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமான எதிர்ப்பு போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்ந்தும் சுழற்சிமுறையில் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த மதுபான சாலைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அங்கு வருகை தந்த மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்தபோதும் இதனால் தமது கிராமத்திற்கு பாதிப்புள்ளதாக தெரிவித்தனர்.

இவ் மதுபான சாலையை நிரந்தரமாக மூடும் வரை சுழற்சி முறையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்