இலங்கையின் 1990 சுவசெரிய இலவச தேசிய அவசர அம்பியூலன்ஸ் சேவைக்காக, முழுமையான மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 100 புதிய அம்பியூலன்ஸ்களை கொள்வனவு செய்வதற்கு இந்திய அரசாங்கம் நிதி மானியம் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை அரசாங்கம் விடுத்த விசேட கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நிதியுதவியை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, நாளை புதன்கிழமை இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்திய சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடலின்போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
புதிதாகக் கொள்வனவு செய்யப்படவுள்ள அம்பியூலன்ஸ்கள், தற்போது 322 அம்பியூலன்ஸ்களுடன் இயங்கிவரும் சுவசெரிய சேவையின் செயற்பாட்டுத் திறனை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள அம்பியூலன்ஸ்கள் நீண்டகாலமாகத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படுவதால் அவற்றில் இயந்திரக் கோளாறுகள் அதிகரித்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அம்புலன்ஸ்கள் அனைத்தும் இணைந்து வருடாந்தம் சுமார் 90 இலட்சம் கிலோமீற்றர் தூரம் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிதியுதவியுடன் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 1990 சுவசெரிய அவசர அம்பியூலன்ஸ் சேவை, 2018ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 24 மணிநேரமும் இலவசமாக இயங்கிவரும் இந்தச் சேவை, நாளாந்தம் சுமார் 1,000 முதல் 1,200 வரையான நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
புதிய அம்பியூலன்ஸ்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சமர்ப்பித்த முன்மொழிவுக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.









