அநுராதபுரம், ரம்பேவ – மதவாச்சி பகுதியில் இடம்பெற்ற மூன்று பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் காயமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்டச் செயலகத்தின் ஊடாக இந்த வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளதாகவும், குறித்த விபத்தில் மொத்தம் 76 பேர் காயமடைந்து அப்பகுதியிலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்தவர்களில் 61 பேர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு எலும்பியல் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தலையில் காயமடைந்த சிலர் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மூவருக்கு MRI ஸ்கேன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமைச்சருக்குக் கிடைத்த சமீபத்திய தகவல்களின்படி, தீவிர சிகிச்சைப் பிரிவில் எந்தவொரு நோயாளியும் சிகிச்சை பெறவில்லை என்பதுடன், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் எவரும் உயிரிழக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக எவரையும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டிய தேவையும் ஏற்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மதவாச்சி ஆதார வைத்தியசாலையில் மேலும் 25 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 10 பேர் பின்னர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் ரம்பேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களும் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் ஆரம்பத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
காயமடைந்தவர்களில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லாதவர்களும் உள்ளடங்குவதால், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களைப் பார்வையிடுவதற்காக வரும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்குத் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தங்குமிட வசதிகளைப் பெற்றுக்கொள்ள உதவி தேவைப்படும் குடும்ப உறுப்பினர்கள் பின்வரும் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அநுராதபுரம் மாவட்டச் செயலாளர்: 071 435 2016
- அமைச்சின் செயலாளர்: 071 294 8050
காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைகள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலை மற்றும் மதவாச்சி ஆதார வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










