கண்டி பெருநகரப் பிராந்தியத்தில் ரயில் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்தும் நோக்கில், பேராதனை மற்றும் சரசவி உயன பகுதிகளுக்கு இடையில் மகாவலி ஆற்றின் குறுக்கே புதிய ரயில் பாலமொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இந்தப் பாலம், மாத்தளை ரயில் பாதையில் அமைக்கப்படவுள்ளது. கண்டி பெருநகரப் பிராந்தியத்தை உள்ளடக்கிய விரிவான புறநகர் ரயில் வலையமைப்பை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் சேதமடைந்த ரயில்வே உட்கட்டமைப்புகளைப் புனரமைத்து அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவினால் வழங்கப்படும் கடன் திட்டத்தின் ஊடாக இதற்கான நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரவைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய பாலத்தின் நிர்மாணம், மாத்தளை ரயில் பாதையை தேசிய ரயில் போக்குவரத்து வலையமைப்புடன் மேலும் சிறப்பாக இணைப்பதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கண்டி பெருநகரப் பிராந்தியத்தில் விரிவான புறநகர் ரயில் வலையமைப்பொன்றை உருவாக்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் கீழ், பேராதனை ஊடாக கடுகண்ணாவையிலிருந்து கம்பளை வரையான பிரதான ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், பேராதனையிலிருந்து கட்டுகஸ்தோட்டை வரையான மாத்தளை ரயில் பாதையையும் இரட்டை ரயில் பாதையாக மாற்றுவதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள ஒற்றை ரயில் பாதைக் கட்டமைப்பினால் ஏற்படும் போக்குவரத்துத் திறன் கட்டுப்பாடுகளை நீக்குவதுடன், ரயில் சேவைகளின் நம்பகத்தன்மை மற்றும் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துவதும் இந்த அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கமாகும்.
புதிய ரயில் பாலத்தை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.









