அரசாங்கத்தின் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ், மேல் மற்றும் தென் மாகாணங்களில் வீடுகளிலேயே சேதனப் பசளை தயாரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி மன்றங்களால் அடையாளம் காணப்படும் தெரிவுசெய்யப்பட்ட வீதிகள், சேதனக் கழிவுகளைச் சேகரிக்கும் சேவைகள் வழங்கப்படாத வலயங்களாக அறிவிக்கப்படவுள்ளன. இவ்வலயங்களில் வசிக்கும் மக்கள் தமது வீடுகளில் உருவாகும் மக்கும் கழிவுகளைத் தாங்களாகவே சேதனப் பசளையாக மாற்றி முகாமைத்துவம் செய்ய வேண்டும்.
அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, தெரிவுசெய்யப்படும் பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு சேதனப் பசளை தயாரிப்பதற்கான கொள்கலன்கள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் வீடுகளிலேயே மக்கும் கழிவுகளைப் பசளையாக மாற்றுவதற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
ஆரம்பக் கட்டமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், அதன் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு ஏனைய மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
2027ஆம் ஆண்டு முதல் 2029ஆம் ஆண்டு வரையான மூன்று வருட காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘தூய்மையான இலங்கை – பவித்திர புரவர’ (Clean Sri Lanka – Pivithuru Purawara) தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் நாளாந்தம் உருவாகும் திண்மக் கழிவுகளில் சுமார் 50 முதல் 60 சதவீதம் வரை மக்கும் தன்மையுடைய சேதனக் கழிவுகள் உள்ளடங்குவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான கழிவுகளை வீடுகளிலேயே சேதனப் பசளையாக மாற்றுவதன் மூலம், கழிவுகளைச் சேகரித்தல், போக்குவரத்து செய்தல், வகைப்படுத்துதல், மறுசுழற்சி செய்தல் மற்றும் இறுதியாக அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான செலவுகளைப் பெருமளவில் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல்களும் அறிவும் வழங்கப்படவுள்ளதுடன், அதன் நடைமுறைப்படுத்தலை உள்ளூராட்சி மன்றங்கள் கண்காணிக்கவுள்ளன.
தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சமர்ப்பித்த முன்மொழிவுக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.









