இலங்கையின் 79ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான முதலாவது ஆயத்தக் கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று புதன்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது.
பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான முக்கிய ஏற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொண்டாட்டங்களுக்கான உத்தியோகபூர்வ தொனிப்பொருள், ஏற்பாட்டு நடவடிக்கைகள், நிகழ்ச்சி நிரல் மற்றும் மத அனுஷ்டானங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, பிரதான தேசிய சுதந்திர தின நிகழ்வை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான ஹினிதும சுனில் செனவி, வசந்த சமரசிங்க, சந்தன அபேரத்ன மற்றும் சமந்த வித்யாரத்ன ஆகியோருடன் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேனவும் கலந்துகொண்டனர்.
மேலும், நிதி, பாதுகாப்பு, கல்வி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கள், மேல் மாகாண சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.










