இந்திய மக்களவையில், மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தன்னுடைய பிரம்மச்சரியத்தை சுட்டிக்காட்டி நகைச்சுவையாக பேசியமை சபையில் பலத்த சிரிப்பொலியை உருவாக்கியதுடன், அவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
“நம் அனைவருடைய வாழ்விலும் தாய், சகோதரி, மனைவி எனப் பெண்களின் தாக்கம் அதிகம் உள்ளது. ஆனால், பிரதமர் மோடிக்கும் எனக்கும் ‘மனைவி பிரச்சனை’ (Wife Issue) கிடையாது. அதனால் அந்தத் தரப்பிலிருந்து எங்களுக்கு ஆலோசனைகள் கிடைப்பதில்லை” என ராகுல் காந்தி தெரிவித்தார்
ராகுல் காந்தியின் இந்த கிண்டலான பேச்சைக் கேட்டு சபையில் இருந்த எம்.பி.க்கள் அனைவரும் பலத்த சிரிப்பொலி எழுப்பினர்.
“நேற்று என் சகோதரி (பிரியங்கா காந்தி) ஒரு சாதனையைச் செய்தார். கடந்த 20 ஆண்டுகளில் என்னால் செய்ய முடியாத ஒரு காரியத்தை அவர் செய்தார். அது அமித் ஷாவை சிரிக்க வைத்தது” என குறிப்பிட்டு மீண்டும் சபையில் சிரிப்பலையை உருவாக்கினார் ராகுல் காந்தி.
தொடர்ந்தும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து அவர் பேசுகையில்,
இது பெண்களுக்கான மசோதா அல்ல பெண்களின் பின்னால் ஒளிந்து கொண்டு, இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்ற மத்திய அரசு செய்யும் முயற்சி.மகளிர் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைப்பது ஒரு வெட்கக்கேடான செயல். அரசு புதிய மசோதாவைத் திணிக்காமல், ஏற்கனவே 2023-ல் நிறைவேற்றப்பட்ட அசல் மசோதாவைக் கொண்டு வர வேண்டும். அதை இப்போதே அமல்படுத்த நாங்கள் முழு ஆதரவு தருவோம்.
இது அரசியலமைப்பை விட மனுவாதம் மேலோங்கி இருப்பதைக் காட்டுகிறது. ஓபிசி (OBC), தலித் மற்றும் சிறுபான்மையினப் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய அதிகாரத்தைத் தட்டிப் பறிக்கும் முயற்சியே இது. சாதி வாரிக் கணக்கெடுப்பைத் தவிர்ப்பதற்காக அரசு ஒரு குறுக்கு வழியைத் தேடுகிறது.
மகளிர் இடஒதுக்கீடு என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க அரசு முயல்கிறது, என்று ராகுல் காந்தி மிகக் கடுமையான தொனியில் தனது உரையை ஆற்றினார்.