-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு மற்றும் காயன்குடா கிராமங்களில் உள்ள பாலர் பாடசாலைகளில் கல்வி கற்று 2027ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்குச் செல்லவுள்ள மாணவர்களுக்குப் புத்தகப்பைகள் பாடசாலை உபகரணங்கள் மற்றும் தொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, சேவகம் நிறுவனத்தின் தலைவரும், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் தலைமையிலான குழுவினர் பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கொடுவாமடு தர்சனம் பாலர் பாடசாலை மற்றும் காயன்குடா வாணி பாலர் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்று எதிர்வரும் 2027ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்குச் செல்லவுள்ள மாணவர்களுக்கான உதவிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் ஊடாக பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி வளப் பற்றாக்குறைகளை ஓரளவுக்காவது நிவர்த்தி செய்யும் நோக்கில் அவர்களின் ஆரம்பக் கல்விப் பயணத்தை மகிழ்சியாகவும் நம்பிக்கையுடனும் ஆரம்பிக்கும் நோக்கில் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக இந்த உதவிகள் வழங்கி வைக்கப்படுவதாக ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த பல வருடங்களாக நிலாந்தன் தலைமையிலான குழுவினர் கிராமம் கிராமமாகச் சென்று அங்குள்ள மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், குடிநீர்த் தேவைகள், மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் பாடசாலைகளில் நிலவும் வளப் பற்றாக்குறைகள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அத்துடன் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் பாடசாலைகளுக்கான உதவிகள், மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள் மற்றும் பல்வேறு கல்வி ஊக்குவிப்புத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். இதன் மூலம் பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய கிராம மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில் சேவகம் நிறுவனத்தின் தலைவரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உறுப்பினர் அ. நிதர்சன், இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் சிவதனேஸ், பாலர் பாடசாலை அதிபர் சுஜி, சமூக செயற்பாட்டாளர் பா. நாராயணசாமி, இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க உப தலைவர் நி. நிதீஸ்வரன், சேவகம் நிறுவனத்தின் உப தலைவர் அ. ஜெயராஜ், பொருளாளரும் ஊடகவியலாளருமான கு. சுபோஜன், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.












