மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு : ஒரு சமூகத்தின் தேவையை எடுத்துரைக்கும் ஒரு சிறிய கோரிக்கைக் கடிதம் சில வேளைகளில் மிகப்பெரிய மாற்றத்தின் தொடக்கமாக மாறிவிடுகிறது.
நூலகத்திற்கு மேலும் நூல்கள் தேவை என்ற கோட்டைக்கல்லாறு பொது நூலகத்தின் வேண்டுகோள் அவ்வாறானதொரு பயணத்தையே ஆரம்பித்தது.
குறித்த வேண்டுகோள் பின்னர் ஏறாவூர் விவேகானந்தா பொது நூலகத்தின் தேவையுடன் இணைந்தது. தொடர்ந்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் பல பொது நூலகங்களின் தேவையும் இதனுடன் சேர்ந்தது.
இவ்வாறு ஒரு நூலகத்தின் கோரிக்கையாக ஆரம்பித்த முயற்சி, இன்று கிழக்கு இலங்கையின் பல பொது நூலகங்களைச் சென்றடைந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான, சுமார் 23,000 நூல்களைக் கொண்ட பாரிய அறிவுத் திட்டமாக மாறி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வழங்கப்பட்ட நூல்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் சுவிட்சர்லாந்தில் வாழும் “கல்லாறு சதீஷ்” என்று அழைக்கப்படும் தொழில் அதிபர் , எழுத்தாளர், பேச்சாளர், சமூகச் சேவகர் நாகேஸ்வரன் அருள்ராசாவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூல்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 25,000 தொட்டுள்ளது.

கோட்டைக்கல்லாறு பொது நூலகத்தில் கல்லாறு சதீஷ் ஏற்கனவே வழங்கியிருந்த 540 அரிய நூல்கள் நூலகத்தின் சேகரிப்பை வளப்படுத்தியுள்ளதாகவும், வாசகர்களுக்கு பயனளிப்பதாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களின் அதிகரித்து வரும் தேவைகளைக் கருத்திற்கொண்டு மேலும் சுமார் 7,000 நூல்களை வழங்குமாறும் கோரப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் அண்மையில் கோட்டைக்கல்லாறு பொது நூலகத்திற்கு 7,000 நூல்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சியை ஆரம்பகட்டத்தில் முன்னெடுத்தவர்களில் வாசகர் வட்டத் தலைவர் அருள்ராசா புருஷோத்தமன் மற்றும் நூலகப் பொறுப்பாளர் திருமதி வினோதா அன்றோ ஆகியோர் முக்கியமானவர்கள்.
இதையடுத்து ஏறாவூர் நகரசபையின் கீழ் இயங்கும் விவேகானந்தா பொது நூலகத்திலிருந்து இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு, கலை, அரசியல், கலைக்களஞ்சியங்கள், அகராதிகள், சிறுவர் இலக்கியம், இளையோர் நூல்கள் மற்றும் ஆய்வுப் பதிப்புகள் உள்ளிட்ட பல துறைகளில் தரமான நூல்கள் தேவைப்படுவதாக விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்குப் பதிலாக ஏறாவூர் விவேகானந்தா பொது நூலகத்திற்கு சுமார் 8,000 நூல்கள் ஒதுக்கப்பட்டன. இந்த நூல் வேண்டுகோளை முன்னெடுத்த திருமதி நிலோஜினி மோகனதாஸ் மற்றும் திருமதி அச்சலா ராஜூ ஆகியோரின் பங்களிப்பும் மிக முக்கியமானது.

அத்துடன் குருக்கல்மடம், செட்டிபாளையம், மாங்காடு, தேற்றாத்தீவு, களுதாவளை, களுவாஞ்சிக்குடி, பெரியகல்லாறு, துறைநீலாவணை, மகிளூர், குருமண்வெளி மற்றும் எருவில் ஆகிய பொது நூலகங்களுக்கும் தலா சுமார் 725 நூல்கள் வீதம் ஒதுக்கப்பட்டன.
இந்தியாவிலிருந்து நூல்கள் கொழும்புத் துறைமுகத்தை அடைந்த பின்னர்இ அவற்றை வெளியே எடுத்து ஆவண நடவடிக்கைகளை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்திற்கு கொண்டுசெல்லும் பணியில் ஏறாவூர் நகரசபையின் பிரதித் தவிசாளர் திரு. கஜேந்திரன் ஞானசேகரன் முக்கிய பங்காற்றினார்.
அதேபோன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் வினோராஜ் மேகசுந்தரம் உள்ளூராட்சி மட்டத்தில் தேவைகளை ஒருங்கிணைப்பதிலும் திட்டத்திற்கு ஆதரவான சூழலை உருவாக்குவதிலும் பங்களித்தார்.
1999ஆம் ஆண்டிலிருந்து சுவிட்சர்லாந்தில் தமிழ் நூல்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதோடு, நூல்களை எழுதி வெளியிடுதல், பிற எழுத்தாளர்களின் நூல்களை பதிப்பித்தல், அவற்றை வாசகர்களிடம் கொண்டு சேர்த்தல் ஆகிய பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

அவரது ஆரம்பகால படைப்புகளில் குறிப்பிடத்தக்கது “பனிப்பாறைகளும் சுடுகின்றன” என்ற நூல் இந்தியாவில் வழங்கப்பட்ட லில்லி தேவசிகாமணி நினைவுப் பரிசை பெற்றதுடன் சுவிட்சர்லாந்திலும் ஊக்குவிப்பு அங்கீகாரம் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு அவரது “சொர்க்கங்களும் தண்டிக்கின்றன” என்ற நூல் வெளியானது. இந்த நூலுக்கும் சுவிட்சர்லாந்தில் ஊக்குவிப்பு அங்கீகாரம் கிடைத்தது.
சுவிட்சர்லாந்துக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களிடையே சிறுகதை நூல் வெளியீட்டின் ஆரம்பகாலப் பதிவுகளில் கல்லாறு சதீஷின் பெயரும் இடம்பெறுகிறது.
சுவிட்சர்லாந்தில் தமிழர்களின் குடியேற்ற வாழ்க்கை இருபது ஆண்டுகளை கடந்த காலகட்டத்தில், புலம்பெயர் தமிழர்களின் சாதனைகள் மற்றும் சமூகப் பங்களிப்புகளை மீள்பார்க்கும் நிகழ்வுகளிலும் அவரது இலக்கியப் பணி பதிவு பெற்றது.










