பணிப்புறக்கணிப்பு நேற்று சனிக்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்ததையடுத்து, இன்று காலை முதல் வழமை போல பணிக்குத் திரும்புவதாக, ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அதிகாரிகள் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவு முதல் முன்னறிவிப்பின்றி தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினரின் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு காரணமாக, நேற்று சனிக்கிழமை 250 முதல் 270 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்தநிலையில், பயணச்சீட்டு வழங்கப்படாததால் ரயில் திணைக்களத்துக்கு ஏற்பட்ட இழப்பு 30 மில்லியன் ரூபாவினை நெருங்கியுள்ளதாக, ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் முன்னெடுத்திருந்தது.