இலங்கையில் அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவுகளை வழங்கும்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு இரட்டிப்புக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதை நிதி அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளது.
சிங்கள – தமிழ் புத்தாண்டுக்காக அறிவிக்கப்பட்ட விசேட மேலதிக கொடுப்பனவுகளைச் செயல்படுத்தும்போது, வங்கிக் கோப்புகளை (Payment Files) தவறுதலாக இரண்டு முறை பதிவேற்றியதால் இந்தத் தவறு ஏற்பட்டுள்ளது.
சுமார் 49,759 பயனாளிகள் தங்களுக்குக் கிடைத்த கூடுதல் பணத்தை ஏற்கனவே வங்கிகளில் இருந்து எடுத்துள்ளனர்.
இதன் மொத்த மதிப்பு சுமார் 248.7 மில்லியன் ரூபாய் ஆகும்.
தவறுதலாக வழங்கப்பட்ட இந்தப் பணத்தை, மே மாதத்திற்கான கொடுப்பனவுகளில் இருந்து கழித்துக்கொள்ள (Recover) அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் கிட்டத்தட்ட 500 மில்லியன் ரூபாய் வரை முறைகேடாகப் பரிமாறப்பட்டிருக்கலாம் என ‘சுயாதீன சட்டத்தரணிகள் அமைப்பு’ குற்றம் சாட்டியுள்ளதுடன், இது குறித்து நாடாளுமன்ற விசாரணைக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொடவெலகொட இது குறித்துக் கூறுகையில், குறுகிய கால அவகாசத்தில் மேலதிக கொடுப்பனவுகளை வழங்க வேண்டியிருந்ததால், வழக்கமான டிஜிட்டல் முறைக்கு வெளியே பணிகளைச் செய்தபோது இந்த “மனிதத் தவறு” ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.