மெட்ரோ பஸ் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அவர்கள் முன்வைத்த கருத்துகளின் அடிப்படையில், LMT Go கையடக்கத் தொலைபேசி செயலியில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த செயலியில் காணப்படும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அதன் செயற்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், செயலியைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் பயணிகளின் அனுபவங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் செயலியை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மெட்ரோ பஸ் சேவையின் செயற்பாட்டுப் பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்பச் சேவை வழங்குநர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளும் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.
இதன் மூலம் செயலியில் காணப்படும் பலவீனங்களைக் கண்டறிந்து, பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் தேவையான மேம்பாடுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் வசதியானதாகவும், நம்பகமானதாகவும், வினைத்திறன் மிக்கதாகவும் மாற்றுவதுடன், டிஜிட்டல் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதும் இந்த முயற்சியின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவது என்பது பேருந்து சேவைகளை விரிவுபடுத்துவதுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தையும் உயர்த்துவதை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.










