மாணவர்களிடையே புத்தாக்கம், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், இலங்கையின் முதலாவது ‘புத்தாக்க ஆய்வகம்’ (Tinkering Lab) கொழும்பு நாலந்தா கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் (Hemas Holdings), நாலந்தா கல்லூரி மற்றும் இந்தியாவின் அடல் புத்தாக்க இயக்கம் (Atal Innovation Mission) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில் நாலந்தா கல்லூரியின் அதிபர் யூ.டி. இரான் சம்பிக்க, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷிஷ் சந்திரா மற்றும் நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரருமான மஹேல ஜயவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தியாவில் பாடசாலை மாணவர்களிடையே புத்தாக்கச் சிந்தனைகளை ஊக்குவிப்பதற்காகப் பெருநகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரையில் 10,000 இற்கும் அதிகமான டிங்கரிங் ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வகங்களின் ஊடாக இந்திய மாணவர்கள் தானியங்கி நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் பார்வைக் குறைபாடுடையவர்களுக்கான ஸ்மார்ட் கைத்தடிகள் உள்ளிட்ட பல்வேறு புத்தாக்கத் தீர்வுகளை உருவாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேபோன்ற வாய்ப்புகள் தற்போது இலங்கை மாணவர்களுக்கும் கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் அவர்கள் புதிய யோசனைகளைப் பரிசோதித்தல், அவற்றைச் சோதனைக்கு உட்படுத்துதல், கண்டுபிடிப்புகளை உருவாக்குதல் மற்றும் சர்வதேசச் சந்தைக்கான தயாரிப்புகளை வடிவமைத்தல் போன்றவற்றில் ஈடுபட முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்திற்காக ஒன்றிணைந்த ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் நாலந்தா கல்லூரி நிர்வாகத்திற்குப் பாராட்டுத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர், இம்முயற்சியைச் சாத்தியமாக்கிய அடல் புத்தாக்க இயக்கத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.










