இலங்கையின் தென்பகுதி ஆழ்கடல் பகுதியில், 150 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் (ICE) போதைப்பொருட்களைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடிப் படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி சுமார் 300 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் 1ஆம் திகதி அதிகாலை இலங்கையின் தெற்குப் பகுதி ஆழ்கடலில் உளவுத் தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே குறித்த படகு கைப்பற்றப்பட்டதாக, கடற்படை ஊடகப் பணிப்பாளர் கமாண்டர் சமிந்த வலகுளுகே தெரிவித்தார்.
‘பானா புத்த’ (Phana Putha) எனப் பதிவுசெய்யப்பட்ட இந்த மீன்பிடிப் படகு, கடந்த ஒக்டோபர் 18ஆம் திகதி தங்காலை கந்தர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காகக் கடலுக்குச் சென்றுள்ளது.
கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில், அமெரிக்காவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு அண்மையில் சேவையில் இணைக்கப்பட்ட ‘சமுத்திர விஜய’ என்ற நவீன கடற்படைக் கப்பலைப் பயன்படுத்தி குறித்த படகை இடைமறித்துள்ளதாகக் கடற்படை ஊடகப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இதன்போது படகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் அடங்கிய 10 மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, குறித்த மீன்பிடிப் படகு, அதிலிருந்த ஐந்து சந்தேகநபர்கள், சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்கள் மற்றும் செயற்கைக்கோள் தொலைபேசி ஆகியவற்றைக் கடற்படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட படகும் சந்தேகநபர்களும் இன்று வியாழக்கிழமை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன், போதைப்பொருட்களைப் பரிசோதிக்கும் நடவடிக்கையில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இணைந்துகொண்டனர்.
இதன்போது, ஐஸ் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் 100 பொதிகளும் ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் 52 பொதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை 150 கிலோகிராமைத் தாண்டும் எனச் சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், அவற்றை எடைபோடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதால், சரியான அளவு இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனக் கமாண்டர் சமிந்த வலகுளுகே தெரிவித்துள்ளார்.
மிகவும் துல்லியமான உளவுத் தகவல்களின் அடிப்படையில் நீண்டகாலத் திட்டமிடலுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையில் இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படை, அரச புலனாய்வுப் பிரிவுகள், சர்வதேச புலனாய்வு அமைப்புகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புடன் தொடர்புடைய அமைப்புகள் இணைந்து செயற்பட்டதாகவும், அவை வழங்கிய முக்கிய தகவல்கள் இந்தக் கைப்பற்றலுக்கு உதவியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.










