ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு – 02 கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் கிராமிய விளையாட்டுகளும் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாவடிவேம்பு – 02 கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்பாக கோலாகலமாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் அதிதிகள் கௌரவத்துடன் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் மற்றும் இறை வணக்கம் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு வீரர்களின் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது.
வரவேற்புரை மற்றும் தலைமையுரையைத் தொடர்ந்து தமிழர் கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் இதன்போது நடாத்தப்பட்டன.
மேலும் குறித்த கிராமத்தில் சமூகத்தில் தடம் பதித்தவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மற்றும் அதிதிகள் உரை இடம்பெற்றன.
இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கு பெறுமதியான பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக ஏறாவூர்பற்று பிரதேச சபைத் தவிசாளர் முரளிதரன் ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் சந்திவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அரச அதிகாரிகள் ஆலய நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஊர் பிரமுகர்கள் நலன் விரும்பிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இவ்விழா நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது.
இக் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த உற்சாகத்துடன் இவ் விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
போட்டிகள் அனைத்தும் மிகவும் விறுவிறுப்பாகவும் பார்வையாளர்களைக் கவரும் வகையிலும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
