-மட்டக்களப்பு நிருபர்-
நவராத்திரி விழாவை முன்னிட்டு “வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்” எனும் தொனிப் பொருளில் மயிலம்பாவெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தின் நவராத்திரி விழா நேற்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு உதவும் கரங்கள் அமைப்பின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
சிரேஸ்ட விரிவுரையாளரும், உதவும் கரங்கள் நிறுவனத் தலைவருமான சதாசிவம் ஜெயராஜாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நி.மகேந்திரகுமார் மற்றும் ஆணிவேர் உற்பத்திகள் பணிப்பாளர் திருமதி.எஸ்.ஜனகன் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு பிரதேச சுற்றாடல் உத்தியோகர்த்தர் திருமதி ர.பாஸ்கரன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பு.பிறேம்குமார் ஆகியோரும், கௌரவ அதிதிகளாக ஓய்வுநிலை அதிபர்களான திருமதி திலகவதி ஹரிதாஸ் மற்றும் திருமதி.ச.அருட்ஜோதி மற்றும் உதவும் கரங்கள் இல்ல நிருவாகிகளும் சிறார்களும், அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நவராத்திரி விசேட பூசை நிகழ்வைத் தொடர்ந்து நிகழ்வில் சிறுவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் மேடையை அலங்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.