கட்டுப்பாடற்ற வகையில் மலிவான வெளிநாட்டுத் தேயிலையை இறக்குமதி செய்வது இலங்கையின் பெருந்தோட்டப் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யக்கூடும் என இலங்கைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் (PA) எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக 400,000 இற்கும் அதிகமான சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், உலகளவில் புகழ்பெற்ற தூய சிலோன் தேயிலையின் நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், குறைந்த விலையிலான வெளிநாட்டுத் தேயிலையை இலங்கைக்கு இறக்குமதி செய்து, உள்நாட்டுத் தேயிலையுடன் கலப்படம் செய்து மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிப்பது சிலோன் தேயிலையின் பெறுமதியைச் சீர்குலைப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் உள்ளூர் தேயிலை ஏல விலைகள் வீழ்ச்சியடைவதுடன், உள்நாட்டு தேயிலை உற்பத்தியாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியா மற்றும் கென்யா போன்ற முக்கிய தேயிலை உற்பத்தி நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் தேயிலை உற்பத்திச் செலவு சுமார் 2.5 முதல் 3.1 மடங்கு அதிகமாக உள்ளதாகவும், நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களைச் சார்ந்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஒரு கிலோகிராம் தேயிலையை உற்பத்தி செய்வதற்கான சராசரிச் செலவு 3.10 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உள்ள நிலையில், இந்தியா மற்றும் கென்யாவில் அந்தச் செலவு 1.00 முதல் 1.25 அமெரிக்க டொலர் வரை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பெறுமதி சேர்க்கும் நோக்கில் வெளிநாட்டிலிருந்து ஒரு கிலோகிராம் தேயிலை சுமார் 1.20 அமெரிக்க டொலர் விலையில் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சாதாரண சந்தை நிலைமைகளின்போது, வாராந்தம் 5 முதல் 6 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏலத்திற்கு முன்வைக்கப்படும் கொழும்பு தேயிலை ஏலத்தில் விற்பனையாகாமல் எஞ்சும் தேயிலையின் அளவு சுமார் 5 முதல் 8 சதவீதமாகவே காணப்படும்.
எனினும், குறைந்த விலையிலான வெளிநாட்டுத் தேயிலை இறக்குமதி அதிகரித்ததைத் தொடர்ந்து, விற்பனையாகாமல் எஞ்சும் தேயிலையின் அளவு சுமார் 25 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக CTC தேயிலைப் பிரிவில் இதன் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
தேயிலை ஏல விலைகள் வீழ்ச்சியடைவது சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு பச்சைத் தேயிலைக் கொழுந்துக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளை நேரடியாகப் பாதிப்பதாகவும் சங்கம் எச்சரித்துள்ளது.
ஏற்கனவே அதிகரித்து வரும் தொழிலாளர் செலவுகள், உரச் செலவுகள் மற்றும் ஏனைய செயற்பாட்டுச் செலவுகளால் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் தேயிலையையும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையையும் கலப்பது தொடர்பான விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்தும் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இவ்வாறான கலப்புத் தேயிலை வகைகளில் இறக்குமதி செய்யப்பட்ட தேயிலையின் பங்கு குறைந்த அளவிலேயே இருப்பதை இலங்கைத் தேயிலைச் சபை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மலிவான வெளிநாட்டுத் தேயிலையின் வருகை, சிலோன் தேயிலையின் தனித்துவமான உற்பத்தி அடையாளத்தைப் பாதிக்கக்கூடும் எனவும், சர்வதேச நுகர்வோரின் நம்பிக்கையைக் குறைத்து, இலங்கைத் தேயிலைக்குக் கிடைக்கும் உயர்ந்த விலையைப் பாதிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேயிலை உற்பத்தி மூலம் கிடைக்கும் வருமானம் குறைவடைந்தால், பல சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தேயிலைச் செய்கையைக் கைவிடவோ அல்லது மாற்றுப் பயிர்ச்செய்கைக்கு மாறவோ நேரிடலாம் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தேயிலை உற்பத்தி செய்யும் நாடு என்ற இலங்கையின் அடையாளம் மாறி, வெளிநாட்டுத் தேயிலையைப் பரிமாற்றம் செய்து மீளப் பொதி செய்யும் மையமாக நாடு மாறும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, தேயிலை உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும் விலையைப் பாதுகாத்தல், தேயிலை இறக்குமதி விதிமுறைகளில் காணப்படும் ஓட்டைகளை மூடுதல், உள்நாட்டு தேயிலை மீள் நடுகை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதில் மீண்டும் முதலீடு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் அவசரமாக முன்னெடுக்க வேண்டும் என இலங்கைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.










