ரஷ்யாவின் சட்டமா அதிபர் அலெக்சாண்டர் குட்சான் (Aleksandr Gutsan), உத்தியோகபூர்வ பணிநோக்கிலான விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இரு நாடுகளினதும் சட்டமா அதிபர் திணைக்களங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு வரலாற்றில், ரஷ்ய சட்டமா அதிபர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
இலங்கை வந்தடைந்த அவரை, இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் ட்ஜகாரியன் மற்றும் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர்.
கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இலங்கை சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவுடன் அலெக்சாண்டர் குட்சான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ரஷ்ய சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான விடயங்கள் குறித்து ஏனைய தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்களுடனும் அவர் கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கான ரஷ்யத் தூதரகத்தின் தகவலின்படி, இந்த விஜயத்தின்போது இலங்கை அதிகாரிகளுடன் பல்வேறு சந்திப்புகள் இடம்பெறவுள்ளதுடன், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலான பல ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.
பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி விரிவுபடுத்துவதே இந்த ஒப்பந்தங்களின் நோக்கமாகும்.










