தாய்லாந்தின் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங் கெத்த்கியோவின் மூன்று நாள் உத்தியோகபூர்வ இலங்கை விஜயம் நிறைவடைந்துள்ளது.
இந்த விஜயத்தின்போது, தாய்லாந்தில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங் கெத்த்கியோவுக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின்போதே இந்த விடயம் ஆராயப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தி, தாய்லாந்தில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன், உணவு பதப்படுத்துதல், இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள், விருந்தோம்பல் ஆகிய துறைகளில் தாய்லாந்து நிறுவனங்கள் கொண்டுள்ள நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.
தனது விஜயத்தின்போது தாய்லாந்தின் பிரதி பிரதமர் சிஹாசக் புவாங் கெத்த்கியோ, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது, வர்த்தகம், முதலீடு, விவசாயம், சுற்றுலாத்துறை, தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET), இணைப்புத்திறன் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுலை 2027ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவுடனான சந்திப்பில், குறிப்பாக பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (BIMSTEC) ஊடாக இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் ஜனவரி மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள ‘Sri Lanka Expo 2027’ கண்காட்சியில் தாய்லாந்து வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவொன்றை பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த விஜயத்தின் முக்கிய அம்சமாக, சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்களை இலகுபடுத்துவதுடன், சுற்றுலாத்துறை, மக்கள் தொடர்புப் பரிமாற்றங்கள் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதும் இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
மேலும், தாய்லாந்து மன்னரின் அரச பிரதிநிதியாக இலங்கை வந்திருந்த பிரதி பிரதமர், கண்டி அஸ்கிரிய மகா விகாரையில் நடைபெற்ற புனித கடினச் சீவர தான நிகழ்விலும் கலந்துகொண்டுள்ளார்.
இந்த விஜயம் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நீண்டகால உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பொருளாதார ஒத்துழைப்பு, சுற்றுலாத்துறை, முதலீடு மற்றும் இருநாட்டு மக்களுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.










