வருமானம் ஈட்டாதவர்களாக இருந்தாலும், உரிய காலக்கெடுவுக்குள் வருமான வரி அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறினால் 50,000 ரூபாய் முதல் 400,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி எச்சரித்துள்ளார்.
2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.
குறித்த திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் வருமான வரி அறிக்கைகள் தாமதமானவையாகக் கருதப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருமான வரி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டிய கடப்பாடு உள்ளவர்கள், வருமானம் ஈட்டாத நிலையிலும் அதனைச் சமர்ப்பிக்கத் தவறினால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம். நடைமுறையிலுள்ள வரிச் சட்டங்களின் கீழ் இந்த அபராதம் 400,000 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரியைச் செலுத்தத் தவறிய பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துநர்களுக்கும், 2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரியைச் செலுத்த வேண்டியவர்களுக்கும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற அறிவித்தல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் நந்தன குமார தெரிவித்துள்ளார்.
அபராதங்களைத் தவிர்ப்பதற்காக, வரி செலுத்துநர்கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தமது வரிக் கடமைகளை நிறைவேற்றுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், பணப் பரிவர்த்தனைகள் மூலம் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களுக்கு அதிக வருமான வரி விதிக்கப்படுவதாக அண்மையில் எழுந்துள்ள கவலைகள் குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ் இடம்பெறும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான செலவுகளை, வரிக்குட்பட்ட வருமானத்தைக் கணக்கிடும்போது கழிவுகளாகக் கருத முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் காணி கொள்வனவு செய்தவர்களுக்கு இந்த விதிமுறை பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் நந்தன குமார தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆனால், குறித்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தும் ஒழுங்குவிதிகளைப் பின்பற்றத் தவறினால், அத்தகைய செலவுகளை வரிக் கணக்கீட்டில் கழிக்க முடியாத காரணத்தால் அதிக வருமான வரிப் பொறுப்பை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.










