ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களுக்கு தனது சேவை ரி-56 துப்பாக்கியை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு தேடப்பட்டு வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இன்று வியாழக்கிழமை டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாதுகாப்புப் பிரிவினரைக் கொண்ட குழுவினரால் சந்தேகநபர் டுபாயில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் வீதித் தடுப்பில் கடமையில் ஈடுபட்டிருந்தபோது தனது சேவைத் துப்பாக்கியைத் திருடி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களிடம் ஒப்படைத்த பின்னர் டுபாய்க்குத் தப்பிச் சென்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அநுராதபுரம், பெமடுவ, ஹலம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL-226 விமானம் மூலம் இன்று அதிகாலை 5.20 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதனையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.










