மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சந்திக்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று புதன் கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பிளாந்துறையைச் சேர்ந்த உணவகம் ஒன்றின் உரிமையாளரான தியாகராசா சுகிதரன் (வயது – 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை இரவு நாவிதன்வெளி அன்னமலை பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் நேற்று காலை திக்கோடை சந்திக்கு அருகாமையிலுள்ள வீதியில் மதகு ஒன்றிற்கு அருகில் மோட்டார் சைக்கிளுடன் கீழே வீழ்ந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
மேலும் குறித்த வீதியால் பிரயாணித்தவர்கள் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










