எட்டு மாதங்களாக போலி பொலிஸ் நிலையத்தை நடத்தி வந்த ஐவர் அடங்கிய கும்பலை பொலிசார் மடக்கி பிடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் போலி பொலிஸ் நிலையம் ஒன்று நீண்ட நாட்களாக இயங்கி வருவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கிடைத்துள்ளது. மாவட்ட தலைமையகத்தில் செயல்பட்டு வந்த அந்த பொலிஸ் நிலையத்தில் சோதனை நடத்தச் சென்ற பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.
பாங்கா மாவட்டத்தில் உள்ள விருந்தினர் விடுதிக்கு அருகே ஒரு வாடகை வீட்டில் கடந்த 8 மாதங்களாக போலி பொலிஸ் நிலையம் செயல்பட்டு வந்துள்ளது. இந்த பொலிஸ் நிலையத்தில் சுமார் 5 பேர் அதிகாரிகள் உடையில் தங்களது பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த ஐந்து பேரில் இன்ஸ்பெக்டர் உடையில் இருந்த பெண் தன்னை அனிதா தேவி என பொலிசாரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதைவிட ரமேஷ்குமார் என்பவர் எழுத்தராகவும் , ஆகாஷ் குமார் என்பவர் ஆவண காப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்த விசாரணையில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடம் விசாரித்த போது, தங்களை போலா யாதவ் என்பவர் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தியதாகக் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் இத்தனை நாட்களாக தங்களை நிஜ பொலிஸ் என்றே நம்பி வந்துள்ளனர். இவர்களில் ஆகாஷ் என்பவர் தான் போலா யாதவிடம் 70 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்ததாகக் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு “பாட்னா ஸ்கார்ட் டீம்” என பெயர் வைத்து, அரச கட்டுமானங்கள் எங்கு கட்டப்பட்டாலும் அங்கு சென்று விசாரணை நடத்தி பணம் வசூலிப்பதை வழக்கமாகக் கொண்டிருநதுள்ளனர்.
மேலும், சிறு வியாபாரிகள், கடை நடத்துபவர்கள் உள்ளிட்டோரிடமும் தினந்தோறும் பணம் பெற்று வந்துள்ளது தெரியவந்துள்ளது.
பிடிபட்டவர்கள் அனைவரும் போலா யாதவ் தான் தங்களது மூத்த அதிகாரி என நினைத்து கொண்டிருந்துள்ளனர். இவரால் , இவர்களுக்கு தினந்தோறும் 500 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது . பொலிசிக்கே தெரியாமல் மாவட்டத்தின் முக்கிய பகுதியில் கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த பொலிஸ் நிலையம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.