ஹட்டன் டிக்கோயா நகரில் வர்த்தக நிலையமொன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் வயோதிப தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியல் காவலில் இருந்தபோது, இன்று புதன்கிழமை அதிகாலை சிறை அதிகாரிகளிடமிருந்து தப்பிவிட்டதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்ததாக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.
டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலைய குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர், பொகவந்தலாவை பெற்றோசோ பகுதி வீடொன்றில் மறைந்திருந்தபோது பொதுமக்களின் உதவியுடன் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டு, ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது, திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, சந்தேக நபர் நேற்று செவ்வாய்க்கிழமை சிறை அதிகாரிகளால் கண்டி போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார்.
வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர், இன்று புதன்கிழமை அதிகாலை தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தப்பி சென்ற சந்தேக நபரை சிறைச்சாலை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும், தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை, மீண்டும் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
எனவே இந்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.