கல்கமுவ மற்றும் அம்பன்பொல பகுதிகளுக்கு இடையிலான காசிகோட்டே பகுதியில், யானைகள் பாதுகாப்பாகப் பயணிப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
யானைகள் அடிக்கடி ரயில் பாதையைக் கடக்கும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள காசிகோட்டே பகுதியில், ரயில் பாதையின் கீழாக இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அபிவிருத்திப் பணிகள் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
கடந்த 2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், காட்டு யானைகள் ரயில் பாதையைக் கடக்காமல் அதன் கீழாகப் பாதுகாப்பாகச் செல்வதற்கு வழியமைப்பதாகும். இதன் மூலம் யானைகள் ரயிலுடன் மோதுவதால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதுடன், மனித – யானை மோதல்களையும் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் பாதையின் இருபுறங்களிலும் அமைந்துள்ள வாழிடங்களுக்கு இடையில் யானைகள் தடையின்றி நகர்வதற்கு இந்தச் சுரங்கப்பாதை உதவும். இதன் மூலம் வனவிலங்குகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், ரயில் போக்குவரத்துக்கும் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










