இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனம் மற்றும் இலங்கை பூப்பந்தாட்டச் சங்கம் ஆகியவற்றின் பதிவுகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தி, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இரண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுள்ளார்.
1973ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 32 மற்றும் 33ஆம் பிரிவுகளின் கீழ், திருத்தங்களுடன் இந்த அறிவித்தல்கள் 2026 ஒக்டோபர் 20ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளன.
இரு விளையாட்டுச் சங்கங்களினதும் நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்பார்வை செய்வதற்காகத் தனித்தனியான மாற்றக் குழுக்களையும் அமைச்சர் நியமித்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல்களின்படி, குறித்த குழுக்களுக்கு மோசடி, ஊழல் மற்றும் ஏனைய முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுதல், புதிய யாப்புகளை அறிமுகப்படுத்துதல், தகுதியான உறுப்பினர்களைப் பதிவு செய்தல் மற்றும் விசேட பொதுக்கூட்டங்கள், வருடாந்தப் பொதுக்கூட்டங்களை நடத்துதல் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தின் மாற்றக் குழுவுக்கு அனுர மஹாராச்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை பூப்பந்தாட்டச் சங்கத்தின் மாற்றக் குழுவுக்கு எம்.எச்.எஸ்.எஸ். குசும் குமார தலைமை தாங்கவுள்ளார்.
புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்படும் வரை, இரு குழுக்களும் அந்தந்தச் சங்கங்களின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய யாப்புகள் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் தேர்தல்களை நடத்த வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனம் தொடர்பாக 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் உடனடியாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












