மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும் நாட்டின் கலாசார மரபுகளைப் பாதுகாக்கவும் தனது சிறைவாசம் உதவுமாயின், 500 நாட்கள் வரை சிறையில் இருக்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 23 ஆம் திகதியிட்ட நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், தான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஒக்டோபர் 24 ஆம் திகதியுடன் 50 நாட்கள் நிறைவடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“எனது நாட்டுக்குப் பயன் கிடைப்பதுடன், எமது கலாசார மரபுகளையும் பாதுகாக்க முடியும் என்றால், 50 நாட்கள் மட்டுமன்றி 500 நாட்கள்கூட சிறையில் இருக்க நான் தயாராக இருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை முன்னேற்றமடைந்து வருவதாக அரசாங்கம் கூறிவரும் நிலையில், பொதுமக்கள் தொடர்ந்தும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதாக நாமல் ராஜபக்ஷ விமர்சித்துள்ளார்.
மின்சாரக் கட்டணங்களை மூன்றில் இரண்டு பங்காகக் குறைத்தல், எரிபொருள் விலைகளைக் குறைத்தல், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்குதல், பிணையின்றி வட்டியில்லாக் கடன்களை வழங்குதல், டொயோட்டா விட்ஸ் (Toyota Vitz) கார்களை சுமார் 12 இலட்சம் ரூபாவுக்கு வழங்குதல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் வரிகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளையும் முன்மொழிவுகளையும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டின் முக்கிய பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக ஒரு அரசியல் குடும்பத்தை இலக்குவைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“நாடு இத்தகைய நெருக்கடியான தருணத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டின் பிரச்சினைகளின் சுமையை ஒரு குடும்பத்தின் பின்னால் மறைக்க முயற்சிப்பது அபத்தமானது” என அவர் தெரிவித்துள்ளார்.
சின்னமாக விளங்கிய தந்தந்தங்களைக் கொண்ட கவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு குறித்தும் தனது கவலையை வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, அந்த விலங்கைப் பாதுகாக்கத் தவறியமை தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் கலாசார மற்றும் இயற்கை மரபுகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் மரபுகளைப் பாதுகாத்த தலைவரெனப் பாராட்டியுள்ள அவர், உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மதம் மற்றும் கலாசாரம் தொடர்பான விடயங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், ஜனநாயக சமூகங்களில் நாகரிகமான கலந்துரையாடல்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். அதேவேளை, மதங்களை அவமதித்தல், உண்மைகளைத் திரிபுபடுத்துதல் மற்றும் வெறுப்புணர்வைப் பரப்புதல் ஆகியவற்றுக்கு எதிராகவும் எச்சரித்துள்ளார்.
“மதம் என்பது போட்டியல்ல, அது ஒன்றிணைந்து வாழ்வதாகும். அது ஒரு நடிப்பல்ல; புரிந்துகொள்வதாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளிலிருந்து இறுதியில் நீதித்துறை தன்னை விடுவிக்கும் என்ற நம்பிக்கையையும் நாமல் ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
சிறைவாசம் தனது வாழ்க்கை மற்றும் அரசியல் குறித்து ஆழமாகச் சிந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருப்பது தனது சிந்தனைகளையோ அரசியல் நம்பிக்கைகளையோ கட்டுப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
“நீங்கள் என்னைச் சிறையில் அடைக்கலாம். ஆனால், எமது அணிக்கு ஆதரவாக நிற்கும் மக்களின் அபிலாஷைகளைச் சிறையில் அடைக்க முடியாது” என அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.










