வென்னப்புவ-வெல்லமன்கர மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் விற்பனைக்காகத் தயார்படுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 20 கடல் நண்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
கடலோரக் காவல்படையினரால் முன்னெடுக்கப்பட்ட புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலான விசேட நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் சட்டத்தின் 34 ஆவது பிரிவையும், ஒக்டோபர் மாதத்தில் கடல் நண்டுகளைப் பிடிப்பதற்குத் தடை விதிக்கும் விதிமுறைகளையும் மீறியதாகச் சந்தேகநபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் கைப்பற்றப்பட்ட 20 கடல் நண்டுகளும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுத்து, நாட்டின் கடல் வளங்களைப் பாதுகாக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டதாகக் கடலோரக் காவல்படை மேலும் தெரிவித்துள்ளது.










