ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, 2027ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள ஆண்டு நிறைவுக்கான உத்தியோகபூர்வ இலச்சினையை வடிவமைப்பதற்கான பொதுப் போட்டியை ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளைக் கொண்டாடுவதற்கும், இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் நினைவு நிகழ்வுகளில் பயன்படுத்தப்படவுள்ள உத்தியோகபூர்வ இலச்சினை இந்தப் போட்டியின் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளது.
இந்தப் போட்டியில் வயது அல்லது வசிப்பிட நாடு என்ற வேறுபாடின்றி, ஜப்பான் மற்றும் இலங்கைப் பிரஜைகள் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விரும்புவோர் தங்களது வடிவமைப்புகளை 2026 நவம்பர் 13ஆம் திகதிக்கு முன்னர் japansrilanka75@mofa.go.jp என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். மின்னஞ்சலின் தலைப்பில் “Logo Entry” எனக் குறிப்பிடுவது அவசியமாகும்.
சமர்ப்பிக்கப்படும் இலச்சினை வடிவமைப்புகள் வண்ணம் மற்றும் கருப்பு-வெள்ளை ஆகிய இரு வடிவங்களிலும் இருக்க வேண்டும். அத்துடன், வடிவமைப்பின் கருத்து மற்றும் நோக்கத்தை விளக்கும் சுமார் 80 சொற்களைக் கொண்ட தனியான விளக்கத்தையும் இணைக்க வேண்டும்.
வடிவமைப்புகள் JPEG, PDF அல்லது EPS கோப்பு வடிவங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கோப்பினதும் அளவு அதிகபட்சம் 3 MB ஆக இருக்க வேண்டும் என்பதுடன், குறைந்தபட்சம் 300 DPI தெளிவுத்திறனையும் கொண்டிருக்க வேண்டும்.
இலச்சினைகளை உருவாக்குவதற்காக ஆக்கபூர்வ செயற்கை நுண்ணறிவு (Generative AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு அமைச்சு தடை விதித்துள்ளது. பதிப்புரிமை தொடர்பான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதே இதற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வடிவமைப்புகளும் சொந்தமாக உருவாக்கப்பட்டவையாகவும், இதற்கு முன்னர் வெளியிடப்படாதவையாகவும் இருக்க வேண்டும் என்பதுடன், பதிப்புரிமை அல்லது வர்த்தக முத்திரை உரிமைகளை மீறாதவையாகவும் இருக்க வேண்டும்.
போட்டியில் வெற்றிபெறும் வடிவமைப்பு 2026 டிசம்பர் மாத இறுதிப் பகுதியில் ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், தெரிவுசெய்யப்படும் வடிவமைப்பாளருக்கு பணப்பரிசு, விருது அல்லது வேறு எந்தவிதமான இழப்பீடும் வழங்கப்படமாட்டாது என அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. போட்டி நிபந்தனைகளுக்கு அமைய, சமர்ப்பிக்கப்படும் வடிவமைப்புகள் தொடர்பான பதிப்புரிமை உள்ளிட்ட உரிமைகள் ஜப்பான் வெளிவிவகார அமைச்சுக்குச் சொந்தமாகும்.
தெரிவுசெய்யப்படும் இலச்சினை, ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பயன்படுத்தப்படவுள்ளது.










