இலங்கையில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் பௌத்த பிக்குகள் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் காவியுடை அணிவதற்கு அனுமதிக்கும் புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
2026 ஒக்டோபர் 20 ஆம் திகதியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பு, நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் அனுமதியுடன், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 54) கீழ் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிலையான கட்டளைகளில் திருத்தங்களை மேற்கொள்கிறது.
பௌத்த பிக்கு ஒருவர் சிறையில் அடைக்கப்படும் சந்தர்ப்பத்தில், அவர் காவியுடையை அகற்றுவது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர், பௌத்த விவகாரத் திணைக்களத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும் எனப் புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பௌத்த விவகாரத் திணைக்களம் சம்பந்தப்பட்ட பௌத்த பீடம் அல்லது நிகாயத்துக்கு அறிவித்து, அதன் தீர்மானத்தை 10 நாட்களுக்குள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டும். குறித்த காலப்பகுதிக்குள் பதில் கிடைக்காவிட்டால், தொடர்புடைய விதிமுறைகளுக்கு அமைவாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சிறைக்கைதியாகப் பௌத்த பிக்கு ஒருவர் சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில், அவர் காவியுடை அணிந்திருக்கவும் புதிய திருத்தங்கள் அனுமதிக்கின்றன. எனினும், சம்பந்தப்பட்ட பௌத்த பீடம் அல்லது நிகாயம் காவியுடை அணிவதற்கு அனுமதி வழங்காத பட்சத்தில், சிறைச்சாலைகள் ஆணையாளர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பிக்கு ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு ஏழு வேலை நாட்களுக்குள், அவருக்குக் காவியுடை அணிவிப்பதற்கான தேவையான அனுமதியை சம்பந்தப்பட்ட பௌத்த பீடம் அல்லது நிகாயத்திடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு பௌத்த விவகாரத் திணைக்களத்திடம் சிறைச்சாலைகள் ஆணையாளர் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் தேவையான மாற்றங்களுடன் ஏனைய மதங்களைச் சேர்ந்த மதகுருமார்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நடத்தப்படும் விதம் மற்றும் அவர்கள் சிறைக்காவலில் இருக்கும்போது மத உடைகளை அணிய அனுமதிக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பில் பொதுவெளியில் விவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இந்தப் புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.











