-நானுஓயா நிருபர்-
நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்துஅ மேலும் தெரிய வருகையில்,
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திலிருந்து மாலை 6:30 மணியளவில் தலவாக்கலை நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்தில் நானுஓயா பிரதான நகரில் அமைந்துள்ள தரிப்பிடத்தில் வைத்து பேருந்தில் ஏறியவர்கள் பேருந்தில் பின் பகுதியில் உள்ள டிக்கியில் வைத்திருந்த சில பயணிகளின் பெறுமதி வாய்ந்த அத்தியாவசிய பொருட்களை கொள்ளையிட்டு நானுஓயா கிளாரண்டன் பகுதியில் இறங்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பொருட்களை கொள்ளையிட்டு கொண்டு பேருந்தின் டிக்கி கதவினை உரிய முறையில் மூடாமல் சென்றமையால் 200 மீற்றர் தூரம் சென்றதன் பின்னர் குறித்த பேருந்தின் பின்னால் பயணித்த வேனின் சாரதி ஒருவர் பேருந்தினை முந்தி சென்று பேருந்து சாரதியிடம் பின்பகுதியில் உள்ள டிக்கி கதவு திறந்து இருப்பதை தெரிவித்துள்ளார், அதன் பின்னர் பேருந்தினை நானுஓயா டெஸ்போட் பகுதியில் வீதி ஓரமாக நிறுத்தி சாரதி, நடத்துனர், மற்றும் பயணிகள் இறங்கி பார்த்த போதே டிக்கியில் வைத்திருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் அருகில் இருந்த நானுஓயா பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பொலிஸாரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து தொலைந்த பொருட்களின் உரிமையாளர்கள் தங்களுடைய முறைப்பாடுக்களை பதிவு செய்துள்ளனர்.
இதன்போது ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டதுடன் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக நானுஓயா கிளாரண்டன் பகுதிகளில் இருந்து மாலை நேரங்களில் பேருந்தினை பயன்படுத்தும் சிலர் தொடர்ந்து இவ்வாறான சமூக சீர்கேடான நாசகார செயற்பாடுகளை செய்து வருவதாகவும் இது தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையத்திற்கு அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்