-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம்-சாவகச்சேரி பகுதியில், நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில், அண்ணன்-தங்கை என இருவர் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கணவன் மனைவி இருவருக்கிடையிலான விவாகரத்து வழக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குறித்த பெண்ணும் அவரது சகோதரனும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலையாகிவிட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அவர்கள் வீதியில் பயணித்துக்கொண்டிருக்கையில் திடீரென அவர்களை வழிமறித்த கணவன், அவர்களை வீதியில் இழுத்து விழுத்தி, மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டார்.
இதன்போது, இருவரும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சந்தேகநபரான கணவனை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனது மனைவியை அவரது சகோதரனே தன்னிடம் இருந்து பிரித்ததாக தெரிவித்து, கணவன் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரை, சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.