இலங்கையின் தேர்தல் மாவட்டங்களுக்கான புதிய நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீட்டின்படி, கொழும்பு தேர்தல் மாவட்டத்திற்கு ஒரு ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்திற்கு ஒரு ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு நவம்பர் 3ஆம் திகதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 18 ஆக இருந்த கொழும்பு மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பதுளை மாவட்டத்திற்கான ஆசனங்களின் எண்ணிக்கை 9 இலிருந்து 8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏனைய 20 தேர்தல் மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீடுகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவலின்படி, 2026ஆம் ஆண்டுக்கான பிரதான வாக்காளர் பதிவேடு மற்றும் முதலாவது துணைப் பதிவேட்டின் அடிப்படையில் இலங்கையில் மொத்தம் 17,534,397 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
இதன்படி, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கு தலா 19 நாடாளுமன்ற ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. குருநாகல் மாவட்டத்திற்கு 15 ஆசனங்களும், கண்டி மாவட்டத்திற்கு 12 ஆசனங்களும், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு தலா 11 ஆசனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்பின் 98(8) உறுப்புரையின் பிரகாரம் இந்த ஆசன ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2511/02 கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையின் தேர்தல் முறைமைக்கு அமைய, 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் 196 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதுடன், தேசியப் பட்டியல் ஊடாக மேலும் 29 உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதன்படி, நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகும்.
புதிய ஆசன ஒதுக்கீடு தற்போதைய நாடாளுமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கையிலோ அல்லது அதன் அமைப்பிலோ மாற்றத்தை ஏற்படுத்தாது. எனினும், எதிர்காலத்தில் நடைபெறும் பொதுத் தேர்தல்களில் மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இது தீர்மானிக்கும்.
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது கொழும்பு மாவட்டத்திற்கான ஆசனங்கள் 19 இலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டிருந்தன. அதேவேளை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு தலா ஓர் ஆசனம் அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிய ஒதுக்கீட்டின் மூலம் கொழும்பு மாவட்டத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மீண்டும் 19 ஆக உயர்ந்துள்ளது.











