திருகோணமலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய தகராறே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, நேற்று திங்கட்கிழமை இரவு உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையொன்றில் ஏற்பட்ட தகராறே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
திருகோணமலையிலிருந்து கப்பல்துறை சந்தி நோக்கி வாடகை முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த குழுவினர் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்தின்போது, முச்சக்கரவண்டியின் பின்புறத்தில் பயணித்த இருவரில் ஒருவர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொள்வதற்காக வாகனத்திலிருந்து இறங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் திருகோணமலையைச் சேர்ந்த 39 வயதுடைய கடற்படை வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்தவர்கள் ஆனந்தகுளம் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 38 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ரி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










