கன மழை காரணமாக தெதுரு ஓயா பெருக்கெடுத்துள்ளதைத் தொடர்ந்து, நாட்டின் வடக்கு ரயில் மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, வெள்ளநீர் ரயில் பாதைகளை மூழ்கடித்துள்ளதால் குருநாகல் மற்றும் மஹோ ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெல்லவ மற்றும் கணேவத்த பகுதிகளுக்கு இடையில் தெதுரு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பிலிருந்து புறப்படும் ரயில்கள் குருநாகல் வரையிலும், யாழ்ப்பாணத்திலிருந்து வரும் ரயில்கள் மஹோ வரையிலும் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும்.
இதேவேளை, நேற்று திங்கட்கிழமை பெய்த கடும் மழையைத் தொடர்ந்து தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் தலா ஒரு அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஏனைய நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.










