அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இராஜதந்திர ரீதியிலான இணக்கப்பாடு எட்டப்படலாம் என்ற எதிர்பார்ப்பைத் தொடர்ந்து, நேற்று திங்கட்கிழமை உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை 7 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது கடந்த சில மாதங்களில் ஒரே நாளில் பதிவான மிகப்பெரிய விலை வீழ்ச்சியாகும்.
எட்டு மாதங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவுடனான தொடர்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, பிரென்ட் மசகு எண்ணெய் எதிர்கால விலைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.
எரிசக்தி விலைகளில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி பணவீக்கம் தொடர்பான கவலைகளைக் குறைத்துள்ளதுடன், நீண்டகால அமெரிக்க திறைசேரிப் பத்திரங்களின் வட்டி விளைச்சலையும் கீழிறக்கியுள்ளது.
அமெரிக்காவின் 10 ஆண்டுகால திறைசேரிப் பத்திரங்களின் வட்டி விளைச்சல் 4.9145 சதவீதமாகப் பதிவாகியுள்ளதுடன், 30 ஆண்டுகால பத்திரங்களின் வட்டி விளைச்சல் 5.2868 சதவீதமாக நிலைத்திருந்தது. இதற்கு முந்தைய வர்த்தக அமர்வில் இவ்விரு பத்திரங்களின் வட்டி விளைச்சலும் சுமார் இரண்டு மாதங்களில் இல்லாத குறைந்த மட்டத்தை எட்டியிருந்தன.
இதேவேளை, இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலரின் பெறுமதி சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது. யூரோ மற்றும் ஜப்பானிய யென் உள்ளிட்ட முக்கிய நாணயங்களுக்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதியை அளவிடும் டொலர் சுட்டெண் 101.76 ஆகப் பதிவாகியுள்ளது. இது திங்கட்கிழமை ஒரு மாதத்தில் இல்லாத குறைந்த மட்டத்தை எட்டியிருந்தது.
அவுஸ்திரேலிய மத்திய வங்கியின் வட்டி விகிதத் தீர்மானம் வெளியாகவுள்ள நிலையில், அவுஸ்திரேலிய டொலரின் பெறுமதி மாற்றமின்றி நிலைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










