உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞரும் மின்னணு இசைத் தயாரிப்பாளருமான DJ Snake, இலங்கையில் தனது முதலாவது இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், இலங்கை ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தனக்குக் கிடைத்த உற்சாகமான வரவேற்பும், ரசிகர்களின் அன்பும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், மீண்டும் இலங்கைக்கு வருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
தனது இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவொன்றை வெளியிட்ட அவர், “இலங்கையே, உங்கள் அன்புக்கும், உற்சாகத்துக்கும், மறக்க முடியாத நினைவுகளுக்கும் நன்றி. இதுவே எனது முதலாவது வருகை. ஆனால், நிச்சயமாக இறுதி வருகையாக இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
‘Lean On’, ‘Turn Down for What’, ‘Taki Taki’ உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பாடல்களை உருவாக்கிய DJ Snake, இலங்கையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்த அரங்கில் உற்சாகமான இசை நிகழ்ச்சியை நடத்தியிருந்தார்.
இந்த நிகழ்ச்சி இலங்கையின் நேரடி இசை (Live Music) நிகழ்ச்சித் துறையில் முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.












