வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள ‘முரசு’ (Murasu) தீவிர சூறாவளிப் புயல் காரணமாக, ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, 10° வடக்கு முதல் 17° வடக்கு வரையான அட்சரேகைகளுக்கும், 80° கிழக்கு முதல் 85° கிழக்கு வரையான தீர்க்கரேகைகளுக்கும் இடைப்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்வதை மறு அறிவித்தல் வரை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழ்கடல் பகுதிகளுக்கும் மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் 15.3° வடக்கு அட்சரேகை மற்றும் 80.3° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் நிலைகொண்டிருந்த ‘முரசு’ தீவிர சூறாவளிப் புயல், வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று இலங்கையைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சிலாபத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பகுதிகளில் தென்மேற்கு அல்லது தெற்கு திசையிலிருந்து மணிக்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், ஏனைய கடற்பகுதிகள் மிதமான நிலையில் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையை அடையக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மீனவர்களும் கடற்படையினரும் அவதானத்துடன் செயற்படுவதுடன், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அடுத்தடுத்த வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.










