கொழும்பு, களுபோவில, ராகம, மட்டக்களப்பு மற்றும் பேராதனை வைத்தியசாலைகள் உள்ளிட்ட நாட்டின் ஐந்து முக்கிய வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் குழுவின் அனுமதியுடன் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுகாதார அமைச்சில் வைத்து வழங்கியுள்ளார்.
இதற்கமைய, களுபோவில போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக டபிள்யூ.எம்.யு.எஸ். விஜேமான்னவும், ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக டி.ஏ.கே. பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக டபிள்யூ.ஏ.பி.பி. ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக ஜீ. சுகுணனும், பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக டபிள்யூ.எம்.சி.எம். விஜேசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், நாட்டின் முக்கிய வைத்தியசாலைகளின் நிர்வாகத் திறனையும் சேவைகளின் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நியமன நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.










