கிரிஷ் நிறுவனத்துடனான சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
எனினும், அவருக்கு வெளிநாடு செல்லத் தடையும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கில் பிணை கிடைக்காத காரணத்தினால், நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கிரிஷ் நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தாக்கல் செய்த பிணை மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவிருந்தது.
கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள ட்ரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கத்திலுள்ள காணியை பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமொன்றுக்காக கிரிஷ் நிறுவனத்திற்கு மாற்றிக் கொடுப்பதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக, 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த காணியை நிறுவனத்திற்கு மாற்றிக் கொடுப்பதற்கு உதவியதற்குப் பிரதியுபகாரமாக இந்தப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.










