அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐந்து மாணவர்கள் இன்று மதியம் நிந்தவூர் கடற்கரைக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களில் இருவர் கடலில் இறங்கி நீராடியுள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாக ஒருவர் திடீரென கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனை அவதானித்த கரையிலிருந்த ஏனைய மாணவர்கள் அபயக்குரல் எழுப்பியுள்ளனர். அவர்களின் கூக்குரலைக் கேட்ட அப்பகுதியிலிருந்த பொதுமகன் ஒருவர் உடனடியாகக் கடலில் குதித்து, அலையில் சிக்கியிருந்த மாணவர்களில் ஒருவரைப் போராடி மீட்டுக் கரைக்குக் கொண்டு வந்துள்ளார்.
தொடர்ந்து, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மற்றைய மாணவரைக் காப்பாற்றுவதற்காக அப்பொதுமகன் மீண்டும் கடலுக்குள் சென்றபோது, எதிர்பாராத விதமாக அவரும் குறித்த மாணவரும் பாரிய அலையில் இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட நபர் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸார், இராணுவத்தினர், கடற்படையினர் ஆகியோர் இணைந்து நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தின் உதவியுடனும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, சாய்ந்தமருது ஜனாஸா பேரவை, கல்முனை ஆழ்கடல் மீட்புக் குழுவினர் மற்றும் நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பின் மீட்பு வாகனம் உள்ளிட்ட தன்னார்வ மீட்புக் குழுவினரும் கடற்கரையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை அறிந்து பெருமளவான பொதுமக்கள் நிந்தவூர் கடற்கரையில் திரண்டுள்ளதுடன், பல்வேறு தரப்பினரும் தேடுதல் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். எனினும், மாலை வேளையாகி இருள் சூழ்ந்துள்ளமையால் கடலில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாளை சனிக்கிழமை அதிகாலை மீண்டும் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.









