கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் புனித தந்த தாதுவைத் தாங்கியுள்ள பீடத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள தங்க விதானம், விரிவான புனரமைப்புப் பணிகளின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 2,900 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்தத் தங்க விதானத்தின் புனரமைப்புப் பணிகள், தாய்லாந்தின் நிதியுதவியுடன் 2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது, விதானத்தின் முழுப் பரப்பிலும் 24 கரட் தங்க மொசைக் வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஸ்ரீ தலதா மாளிகை ஊடகப் பிரிவின் தகவலின்படி, தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெலவின் வழிகாட்டுதலின் கீழும், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் ஆசியுடனும் இந்தப் புனரமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற இத்தாலிய நிறுவனமொன்றின் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் வடிவமைப்புகளின் அடிப்படையில் தங்க மொசைக் வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், விதானத்தின் உலோகக் கட்டமைப்பு பரிசோதிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டதுடன், தங்கத் தாமரை வடிவங்கள் உள்ளிட்ட அலங்கார அம்சங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
விதானத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள இரு கலசங்களும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட Royal Insignia நிறுவனத்தினால் தூய தங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், ஜப்பானின் Iwasaki நிறுவனத்தினால் வழங்கப்பட்ட High-Beam Eye Light ஒளியமைப்பு முறையும் பொருத்தப்பட்டுள்ளது.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் புனித தந்த தாதுவைத் தாங்கியுள்ள பீடத்தின் அழகையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில், அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசவினால் 1987ஆம் ஆண்டு இந்தத் தங்க விதானம் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
இதன் ஆரம்ப வடிவமைப்பு, பொறியியலாளர் காமினு சில்வாவின் தலைமையிலான அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்டதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொறியியல் குழுக்களும் இதற்குப் பங்களிப்பு வழங்கியிருந்தன.
இதற்கு முன்னர் 2002 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் இந்தத் தங்க விதானம் புனரமைக்கப்பட்டிருந்தது. எனினும், காலப்போக்கில் அதன் தங்கப் பூச்சு சேதமடைந்து, ஆரம்பகாலப் பொலிவை இழந்திருந்தது.
இன்று நடைபெற்ற திறப்பு விழாவில் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர், மகா சங்கத்தினர், தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெல மற்றும் தாய்லாந்தின் Wat Marp Jan விகாரையைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய Luang Por Anan Akancagano தலைமையிலான தாய்லாந்துத் தூதுக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.










