அமெரிக்கப் பிரஜைகளை இலக்கு வைத்து சர்வதேச ரீதியில் மோசடிகளில் ஈடுபடும் குழுக்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகம் (FBI) மற்றும் நீதித்துறை (DOJ) அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த விஜயத்தின் மூலம், இணையவழி மோசடிகள் மற்றும் எல்லை தாண்டிய குற்றவியல் வலையமைப்புகளை ஒழிப்பதற்காக அமெரிக்கா மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்போது, அமெரிக்க அதிகாரிகள் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸின் விசேட பிரிவுகளான கணினிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCIU), மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) மற்றும் தொழில்நுட்ப உதவிப் பிரிவு (TAU) ஆகியவற்றுடன் இணைந்து கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, விசாரணையில் உள்ள இரண்டு மோசடி மையங்கள் தொடர்பான வழக்குகள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், டிஜிட்டல் ஆதாரங்களைப் பெறுவதற்காக 80க்கும் மேற்பட்ட இலத்திரனியல் சாதனங்களும் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், விசாரணை உத்திகளை மீளாய்வு செய்தல், டிஜிட்டல் ஆதாரங்களைக் கையாள்வது தொடர்பான பயிற்சிகளை வழங்குதல் மற்றும் இலங்கைப் பொலிஸாரின் சுற்றிவளைப்புகளின்போது கைப்பற்றப்பட்ட ஆதாரங்களைப் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் அமெரிக்க அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
இணையவழிக் குற்றச் செயல்கள் மூலம் குறிப்பாக அமெரிக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சர்வதேச மோசடி வலையமைப்புகளை முறியடிப்பதே இந்த விசாரணைகளின் பிரதான நோக்கம் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான எல்லை தாண்டிய குற்றவியல் வலையமைப்புகள் உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பல பில்லியன் டொலர்களை மோசடி செய்வதாகவும், இத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்கு நாடுகளுக்கு இடையிலான சட்ட அமுலாக்க நிறுவனங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, சர்வதேச நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், விசாரணைக்கான தடயங்களைப் பின்தொடரவும், குற்றச்சாட்டுகளை வலுப்படுத்தவும் FBI மற்றும் இலங்கை அதிகாரிகள் இணைந்து செயற்படவுள்ளனர்.
இரு நாடுகளிலும் மோசடிகளால் பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாப்பதுடன், இணையவழி மோசடிகளில் ஈடுபடுபவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதே இந்த ஒத்துழைப்பின் பரந்த நோக்கம் என அமெரிக்கத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.









