மாத்தளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் திடீரென சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் வழியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.
ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், மாத்தளை பொலிஸ் நிலையத்தின் முதலாம் இலக்க சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சந்தேகநபர் திடீரென சுகவீனமுற்றதையடுத்து, அவரை மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை மாத்தளை ஹித்கொல்ல பிரதேசத்தில் 3,010 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், மாத்தளை பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர் எனவும், கண்டி, கிராண்ட்பாஸ் உள்ளிட்ட சுமார் 10 பொலிஸ் நிலையங்களில் இவருக்கு எதிராகப் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










