நவம்பர் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தமது நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளன.
பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமது கோரிக்கைகளுக்குத் திருப்திகரமான தீர்வுகள் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, இந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
எனினும், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எவ்வாறான வகையில் பங்கேற்கவுள்ளது என்பது தொடர்பில் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.










