ராசையா பார்த்திபன் எனப்படும் திலீபனின் சிலை, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள திலீபன் நினைவுச் சதுக்கத்தில் இருந்து அகற்றப்பட்டமை தொடர்பில், உரிய நீதிமன்றத்தில் பொலிஸார் உண்மைகளைத் தெரிவித்த பின்னரே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணலொன்றில், திலீபனின் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பொலிஸார் நீதிமன்றத்தில் இது தொடர்பான உண்மைகளை முன்வைத்துள்ளதாகவும், சிலை தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கில் செப்டெம்பர் மாதங்களில் பல ஆண்டுகளாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்துள்ளதாகவும், இதன்போது அவரது புகைப்படம் பயன்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எனினும், இந்த ஆண்டு முதல் முறையாக அவரது சிலை ஒன்று நிறுவப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“இந்த ஆண்டு சிலை ஒன்று வைக்கப்பட்டது. அதனை பொலிஸார் அகற்றினர். விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எமது நாட்டின் சட்டங்களின்படி தடைசெய்யப்பட்ட அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகளுக்கு, அதன் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதற்கும் அனுமதி இல்லை. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிலையை அகற்றுவதற்கு முன்னர் பொலிஸார் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்திருந்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என அவர் விளக்கினார்.
நாட்டில் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் அவ்வப்போது இடம்பெற்று வருவதாகவும், அவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
திலீபனின் 39ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகள், நல்லூர் திலீபன் நினைவுச் சதுக்கத்தில் நிறைவடைந்த மறுநாளான ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் சிலை அகற்றப்பட்டது.
1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், இந்திய அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது திலீபன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.










